By Sultan Shahin, Founder-Editor, New Age Islam
சுல்தான் ஷாஹின், நியூ ஏஜ் இஸ்லாம்
அக்டோபர் 10, 2016
9/11 நிகழ்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வன்முறையான இஸ்லாமிய தீவிரவாதத்தின் கொடுமைகள் மேலும் சிக்கலானதாகவும் கொடியதாகவும் மாறிவிட்டது. மனிதகுலத்திற்கு எதிரான இஸ்லாமிய அரசின் போர் என்று அழைக்கப்படுவதில் உலகெங்கிலுமிருந்து 30,000 இஸ்லாமியர்கள் ஆர்வத்துடன் இணைந்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வாறு ஓர் அமைதியான, பன்மைவாத மதத்தை, மனித நேயமற்ற அரக்கர்களை உருவாக்க மிகவும் எளிதாகத் திசைதிருப்பிட இயலும்?
சமூக, பொருளாதார, அரசியல், உளவியல் போன்ற பல காரணிகளில், ஒரு பொதுவான அம்சமாக இருப்பது, மேலாதிக்கவாத, அதீத இனவாத, சகிப்புத்தன்மையற்ற,பிரத்தியேகவாத மற்றும் சர்வாதிகார ஜிஹாதி இறையியலின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய மக்களை மூளைச் சலவை செய்வதாகும்.அமைதி, பன்மைவாதம், அண்டை வீட்டாருடன் ஒருங்கிணைந்து வாழ்தல் இவற்றைக் கற்பிக்கும் 1.6 பில்லியன் இஸ்லாமியர்கள் நம்பும் பேரின்பப்பேற்றின் ஆன்மீகப் பாதையான இஸ்லாம் மதத்தை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்துவதாக இது உள்ளது.
ஆனால் ஜிஹாதி சித்தாந்தம் ஏன் இவ்வளவு விரைவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான ஒரு காரணம் இருக்க வேண்டும்; புகழ்பெற்ற மிதவாத அறிஞர்களால் வழங்கப்பட்ட சமயக்கட்டளைகள் ஏன் பயனற்றவை என்று நிரூபிக்கின்றன? அவர்கள், நாத்திகர் என்று கருதும் இஸ்லாமியர் உட்பட அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறை இறைவனை மகிழ்வித்து அவர்களை சொர்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்று சில இஸ்லாமியர்களின் மனதில் 100 சதவிகிதம் உறுதியை எவ்வாறு ஜிகாதிகள் உருவாக்க முடிகிறது?
Image: thecommentator.com
முஸ்லிம்களாகிய நாம் நமது இறையியலின் சில அடிப்படை அம்சங்களைத் தெளிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜிஹாதி இறையியல் மற்ற இஸ்லாமிய சிந்தனைப்பள்ளிகளின் ஒருமித்த இறையியலிலிருந்து மிகவும் வேறுபட்டதல்ல என்ற அடிப்படை உண்மையில்தான் ஜிஹாதியின் வெற்றி அடங்கியுள்ளது. உதாரணமாக, குர்ஆனில் உள்ள வசனங்கள் எப்படியான சூழலுக்கும் அப்பாற்பட்டு உலகளாவிய அளவில் பொருந்துகின்றன என்று முஸ்லிம்கள் நம்புவதால், ஜிஹாதிகள், குர்ஆனில் உள்ள சகிப்புத்தன்மையற்ற, இனவாத, போர்க்கால வசனங்களைத் தவறாகப் பயன்படுத்த முடிகிறது. உண்மையில், எல்லா இஸ்லாமியக் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் ஒருமித்த இஸ்லாமிய இறையியல் கூறுவது என்னவென்றால், குர்ஆன் உருவாக்கப்படவில்லை, அதாவது இது கடவுளின் ஓர் அம்சம் மட்டுமே; மட்டுமல்ல அதனால் கடவுளைப் போலவே தெய்வீகமானது என்று.
குர்ஆனின்எந்த வசனத்தையும் அதன் உலகளாவிய தன்மை மற்றும் பொருந்தக்கூடியத் தன்மை இவற்றின் அடிப்படையில் கேள்வி கேட்க முடியாது என்பது அதன் கிளைத்தேற்றமாகும். உண்மையில், அவ்விதம் செய்ய முயற்சிக்கும் எந்தவொரு முஸ்லீமும் தெய்வ நிந்தனை செய்பவர் மற்றும் மரணத்திற்கு உரியவர் என்பதாகும். பூமியில் உள்ள குர்ஆன், சொர்கத்தில் ஒரு தெய்வீகப் பெட்டகத்தில் பாதுகாப்பாகக் கிடக்கும் லாஹ்-இ-மஹ்ஃபூஸ் என்று அழைக்கப்படுபவரின் நகல் மட்டுமே என்றே கூறப்படுகிறது.
இது முற்றிலும் பகுத்தறிவற்றது. வன்முறை மற்றும் துன்புறுத்தலுடன் கூடிய இஸ்லாத்தின் சமத்துவ செய்திக்கு மெக்கான் உயர்த்தரப்பு பதிலளிக்கவில்லை என்று வைத்துக் கொண்டால், இது நபிகள் நாயகம் மதீனாவுக்கு தப்பி ஓட வழிவகுத்ததாகிவிடும். நபிகள் நாயகத்தின் வாழ்நாளில் எந்தப் போர்களும் இருந்திருக்காது மற்றும் போர்க்கால வசனங்களுக்குத் தேவையிருந்திருக்காது. அப்படியென்றால் இந்த வசனங்கள் எவ்வாறு உலகளவில் பொருந்தக்கூடியத் தன்மையையும் நிலைபேறுடைய மதிப்பையும் பெற முடியும்?
அதுமட்டுமல்ல. மேலும்திருத்தம் செய்வதற்கான கோட்பாடு என்று அழைக்கப்படுவதைச் சுற்றி இருக்கும் கிட்டத்தட்ட இஸ்லாமிய இறையியலில் உள்ள ஒருமித்த கருத்தின்படி அமைதியான, பன்மைத்துவமான மெக்கன் வசனங்கள், குறைந்தது 124, பிற்கால நேரெதிர் முரண்பட்டமெதினன் வசனங்களால் வழக்கொழிக்கப்பட்டன என்று கருதப்படுகிறது. இது இஸ்லாத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாகவும் மற்றும் ஜிஹாதிசத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது.
இஸ்லாமிய இறையியலாளர்கள் குர்ஆனின் தன்னியல் தோற்றத் தன்மையை, அதன் முழுமையான, கேள்விக்குட்படுத்த முடியாத தெய்வீகத்தன்மையை, திருத்தக் கோட்பாட்டுடன் எவ்வாறு சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பது ஒரு பகுத்தறிவு நபரின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. இது குர்ஆனில்உள்ள எந்த அடிப்படையுடனும் சாராத நம்பிக்கை. இது நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின்னர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது.
நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் என்றும் மற்றும் ஷரியா சட்டங்கள் என்றும் அழைக்கப்படும் ஹதீஸுடன் இணைக்கப்பட்டுள்ளவையும் அதே போன்று தெய்வீகத்தன்மை மற்றும் உலகளாவில் பொருந்தக்கூடிய தன்மை பெற்றவை என்பது உண்மை. நபிகள் மறைந்த தசாப்தங்கள் மற்றும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஹதீஸின் தொகுப்புகள் பதிவு செய்யப்பட்டன.
குர்ஆனின் கிட்டத்தட்ட கடைசி வசனம் (5: 3) கடவுள் இப்போது இஸ்லாத்தின் மதத்தை முழுமையாக்கிவிட்டார் என்று கூறுகிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நாம் எவ்வாறு புத்தகங்களை எழுதி மற்றும் அவற்றிற்கு பொருள் உணர்த்தப்பட்ட சமயநெறி இலக்கியம் என்ற தகுதி நிலையை வழங்க முடியும்? இருந்தாலும், ஹதீஸ் தெய்வீகத் தோற்றத்திற்கு ஒத்ததாக இருப்பதை அனைத்து உலமாக்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இது தெளிவாக பகுத்தறிவின்மையின் உச்சமாகும்.
இதேபோல் ஷரியா முதன்முதலில் நபிகளின் மறைவுக்கு 120 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் காலத்தின் குர்ஆன் மற்றும் அரபு நடைமுறைகளின் சில வசனங்களின் அடிப்படையில் நெறிமுறைப்படுத்தப்பட்டது.இது நாட்டிற்கு நாடு, காலத்திற்கு காலம் மாறிக் கொண்டே வருகிறது. நாம் முஸ்லிம்கள் என்பதால் இந்த ஷரியா உலகில் நிறுவப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பது ஒரு முஸ்லிமின் பிரதான மதக் கடமை என்று பல அறிஞர்களால் நாம் எப்படி போதிக்கப்படமுடியும்?
ஒரு முஸ்லீம் எங்கு நோக்கினாலும், அல்-கசாலி, இப்னு-தைமியா, அப்துல் வஹாப், ஷேக் சர்ஹிந்தி, ஷா வாலியுல்லா முதல் சையத் குதுப் மற்றும் மௌலானா மௌதுடி வரை, அவருக்கு அல்லது அவளுக்கு ஒரே மாதிரியான இஸ்லாம்-மேலாதிக்க செய்தி கிடைக்கிறது.
எல்லா சிந்தனைப் பள்ளிகளாலும் மிகவும் மதிக்கப்படும் இந்த சில கற்றறிந்த பண்டைக்கால உலமாக்கள் நமக்கு சொல்வது என்னவென்று பார்ப்போம்:
இமாம் அபு ஹமித் அல்-கஜாலி (1058-1111): அனைத்து சூஃபி இறையியலாளர்களிலும் மிகப் பெரியவர் என்று கருதப்படுபவர், மற்றும் இஸ்லாமியம் பற்றிய புரிதலில் நபிகள் நாயகத்திற்கு அடுத்தபடியானவர் என்று பலராலும் கருதப்படுபவர்:
“...ஒருவர் வருடத்திற்கு ஒரு முறையாவது ஜிஹாதைக் கடைபிடிக்க வேண்டும்…ஒருவர், அவர்களுக்கு [முஸ்லிமல்லாதவர்கள்] எதிராக அவர்கள் கோட்டையில் இருக்கும்போது ஒரு கவண் பயன்படுத்தலாம்,அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தாலும் கூட.ஒருவர் அவர்களுக்குத் தீ வைக்கலாம் மற்றும்/அல்லது அவர்களை வீழ்த்தலாம்...ஒருவர் அவர்களது உதவாக்கரை புத்தகங்களை அழிக்கவேண்டும், ஜிஹாதிகள் அவர்கள் எதை தீர்மானித்தாலும் கொள்ளையடிக்கலாம்... கிறித்தவர்கள் மற்றும் யூதர்கள் செலுத்த வேண்டும்...ஜிஸ்யா செலுத்த வேண்டும், அதிகாரி அவனது தாடியைப் பிடித்து மற்றும் காதுக்கு அடியில் புடைத்திருக்கும் எலும்பில் அடிக்கும் போது திம்மி தனது தலையைத் தொங்கவிட வேண்டும்,..அவர்கள் மது அல்லது தேவாலய மணிக்கூண்டுகளை வெளிப்படையாகக் காட்ட அனுமதிக்கப்படுவதில்லை...அவர்களின் வீடுகள் ஒரு முஸ்லிமின் வீட்டை விட, அது எவ்வளவு தாழ்ந்ததாக இருந்தாலும், உயர்ந்ததாக இருக்கக் கூடாது, திம்மி ஒரு உயர்தரமான குதிரை அல்லது கொவேறு கழுதையின் மீது சவாரி செய்யக்கூடாது;சேணம் மரத்தால் ஆனதாக இருந்தால் மட்டுமே அவன் கழுதையில் சவாரி செய்யலாம். அவன் சாலைகளின் நல்ல பகுதியில் நடக்கக் கூடாது. அவர்கள், பெண்கள் உட்பட, மற்றும் குளிக்கும் போதும் கூட அடையாளம் காணும் பட்டையை [தங்கள் ஆடைகளில்]அணிய வேண்டும் ... திம்மிகள் தங்கள் நாவை அடக்கியிருக்க வேண்டும்...” (கிதாப் அல்-வாகிஜ் ஃப்ல் ஃபை மதத் அல்-இமாம் அல்-சஃபி’ஐ பக்.186, 190,-203)
இமாம் இப்னு டாய்மிய்யா (1263-1328): வஹாபி-சலாபி முஸ்லிம்களிடையே மிகவும் மதிப்பிற்குரிய ஹன்பலி நீதிபதியும் அறிஞருமான இவரின் செல்வாக்கு சவூதி முடியாட்சியால் அவரது மதத்தை பரப்புவதன் மூலம் சமீபகாலமாக அபரிதமாக வளர்ந்துள்ளது:
“சட்டபூர்வமான போர் அடிப்படையில் ஜிஹாத் முக்கியமானது என்பதால், மற்றும் இது முழுக்க முழுக்க கடவுளின் மதம், கடவுளின் வார்த்தை மிக உயர்ந்தது என்பதே அதன் நோக்கமானதால், எல்லா முஸ்லிம்களின் கூற்றுப்படி, இந்த நோக்கத்தின் வழியில் நிற்பவர்களுடன் போராட வேண்டும்...பீப்பிள் ஆஃப் த புக் மற்றும் ஜொராஸ்ற்றியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் முஸ்லிம்களாக மாறும் வரை அல்லது கையிலிருந்து கப்பம் (ஜிஸ்யா) செலுத்தி, தாழ்த்தப்படும் வரை அவர்களுடன் போராட வேண்டும். மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்களிடமிருந்து கப்பம் பெறுவதில் சட்டபூர்வமான தன்மை குறித்து நீதிபதிகள் வேறுபடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இதை சட்டவிரோதமாகக் கருதுகின்றனர் ... ” (ருடொல்ஃப் பீடர்ஸ், ஜிஹாத் இன் க்ளாசிக்கல் அண்ட் மாடேர்ன் இஸ்லம் லிருந்து எடுக்கப்பட்டது (ஒருப்ஸ்டன், எஞ்சே: மார்க்குஸ் வியன்னெர்,1996), பக்.4-54).
ஷேய்க் அஹமத் சிர்ஹிந்தி (1564-1624): இந்திய இஸ்லாமிய அறிஞர், ஹனாபி ஜூரிஸ்ட், இரண்டாவது மில்லினியத்தின் இஸ்லாத்தை புதுப்பித்த முஜாதித் அல்-இ-சானி என்று கருதப்படுபவர்:
“…இந்தியாவில் பசு தியாகம் என்பது இஸ்லாமிய நடைமுறைகளில் உன்னதமானது.”
“குஃப்ரும் இஸ்லாமும் ஒன்றுக்கொன்று எதிரானது. ஒன்றின் முன்னேற்றம் மற்றொன்றின் இழப்பில் மட்டுமே சாத்தியமாகும், மேலும் இந்த இரண்டு முரண்பாடான நம்பிக்கைகளுக்கு இடையிலான சகவாழ்வு நினைத்துப் பார்க்க முடியாதது.
"இஸ்லாத்தின் மரியாதை குஃப்ர் மற்றும் காஃபிர்களை அவமதிப்பதாகும். எவரொருவர் காஃபிர்களை மதிக்கிறாரோ அவர் முஸ்லிம்களை அவமதிக்கிறார்."
“ஜிஸ்யாவை அவர்கள் மீது சுமத்துவதில் உண்மையான நோக்கம் என்னவென்றால், ஜிஸ்யாவைப் பற்றிய பயத்தின் காரணமாக, அவர்கள் நன்றாக உடை அணியவும், ஆடம்பரமாக வாழவும் முடியாமல் போகும் அளவுக்கு அவர்களை அவமானப்படுத்துவதாகும். அவர்கள் தொடர்ந்து பயந்து நடுங்கிக் கொண்டு இருக்க வேண்டும்".
“ஒரு யூதர் கொல்லப்படும் போதெல்லாம், அது இஸ்லாத்தின் நலனுக்காகவே."
(சையித் அதர் அப்பாஸ் ரிஸ்வி, பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் முஸ்லீம் மறுமலர்ச்சி இயக்கங்கள் லிருந்து எடுக்கப்பட்டது (ஆக்ரா, லக்னோ: ஆக்ரா பல்கலைக்கழகம், பால்கிருஷ்ணா புத்தக நிறுவனம்,1965),
பக். 247-50; மற்றும் யோஹனன் ப்ரீட்மேன், ஷேக் அஹ்மத் சிர்ஹிந்தி: அவரது சிந்தனையின் ஒரு அவுட்லைன் மற்றும் சந்ததிகளின் கண்களில் அவரது படத்தைப் பற்றிய ஒரு ஆய்வு (மாண்ட்ரீல், கியூபெக்: மெக்கில் பல்கலைக்கழகம், இஸ்லாமிய ஆய்வுகள் நிறுவனம், 1971), பக். 73-74.)
ஷா வாலியுல்லா டெஹ்லவி (1703–1762): மிகவும் மதிக்கப்படும் இந்திய அறிஞர், இறையியலாளர், முஹாதிஸ் (ஹதீஸ் நிபுணர்) மற்றும் நீதிபதி:
“மற்ற எல்லா மதங்களின் மீதும் இஸ்லாத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும், மற்றும் அவர்கள் தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டாலும் அல்லது அவமானத்திற்குப் பிறகானாலும் அதன் ஆதிக்கத்திற்கு வெளியே விடக்கூடாது என்பது தீர்க்கதரிசியின் கடமையாகும். இதனால் மக்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்ட காஃபிர்கள் (அவிசுவாசிகள்), விலங்குகள் பயன்படுத்தப்படும் பணிகளான அறுவடை, கதிர் அறுத்தல், சுமைகளைச் சுமப்பது போன்ற தாழ்ந்த உழைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும், கடவுளின் தூதர் காஃபிர்கள் மீது அடக்குமுறை மற்றும் அவமானப்படுத்துதல் என்ற சட்டத்தையும் மற்றும் அவர்களை அவர்களை ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவமானப்படுத்துவதற்கும் ஜிஸ்யாவை அவர்கள் மீது சுமத்துகிறார்…..கிசாஸ் (பழிக்குப்பழி), தியாத் (இரத்த பணம்), திருமணம் மற்றும் அரசாங்க நிர்வாகம் போன்ற விஷயங்களில் அவர் அவர்களை முஸ்லிம்களுக்கு சமமாக நடத்துவதில்லை என்பதால் இந்த கட்டுப்பாடுகள் அவர்களை இறுதியில் இஸ்லாத்தை வலுவில்தழுவச்செய்வதாக வேண்டும். ”(ஹுஜ்ஜதுல்லாஹு அல்-பாலிகா, தொகுதி - 1, அத்தியாயம்- 69, பக்கம் எண் 289)
முஹம்மது இப்னு அப்துல் வஹாப் (1703–1792): சவுதி அரேபியாவின் வஹாபி-சலாபி மதத்தின் நிறுவனர்:
"முஸ்லிம்கள் ஷிர்க் (பாலிதீஸம்) யிலிருந்து விலகி, முவாஹித் (கடவுள் ஒருமையானவர் என்று நம்புபவர்) என்றாலும், முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான அவர்களின் நடவடிக்கை மற்றும் பேச்சில் அவர்களுக்கு பகை மற்றும் வெறுப்பு இல்லாவிட்டால் அவர்களின் நம்பிக்கை முழுமையடைய முடியாது. (இது அவருக்கு உண்மையில் எல்லா வஹாபி அல்லாத அல்லது அல்லது சலாபி அல்லாத முஸ்லிம்கள் உள்ளடக்கியது). (மஜ்முவா அல்-ரசீல் வால்-மசேல் அல்-நஜ்தியா 4/291).
அபுல் ஆ’லா மௌதுதி (1903-1979): இந்திய சித்தாந்தவாதி, ஜமாத்-இ-இஸ்லாமியின் நிறுவனர்:
"பூமியின் முகத்தில் எங்கானாலும், அதை ஆளும் எந்த நாடானாலும் அல்லது தேசமானாலும் சரி, அது இஸ்லாத்தின் சித்தாந்தத்திற்கும் திட்டத்திற்கும் எதிரானதாக இருந்தால் அனைத்து மாநிலங்களையும் அரசாங்கங்களையும் அழிக்க இஸ்லாம் விரும்புகிறது, இஸ்லாத்தின் நோக்கம் என்னவென்றால், எந்த நாடு இஸ்லாத்தின் நிலையான தலைவரின் பங்கை ஏற்றுக்கொள்கிறது அல்லது கருத்தியல்சார் இஸ்லாமிய அரசை நிறுவும் செயல்பாட்டில் எந்த தேசத்தின் ஆட்சியைச் சிதைக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரு தேசத்தை அதன் சொந்த சித்தாந்தம் மற்றும் திட்டத்தின் அடிப்படையில் அமைப்பதுதான், …
"இஸ்லாத்திற்கு பூமி தேவைப்படுகிறது - ஒரு பகுதி மட்டுமல்ல, முழு கிரகமும் .... ஏனென்றால் முழு மனிதகுலமும் [இஸ்லாத்தின்] சித்தாந்தம் மற்றும் நலத்திட்டத்திலிருந்து பயனடைய வேண்டும் ... இதன் இறுதியில், ஒரு புரட்சியைக் கொண்டுவரக்கூடிய அனைத்து சக்திகளையும் இஸ்லாம் சேவையில் ஈடுபடுத்த விரும்புகிறது மற்றும் இந்த சக்திகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு கூட்டுச் சொல் 'ஜிஹாத்' ஆகும். .... இஸ்லாமிய 'ஜிகாத்' ன் நோக்கம் இஸ்லாமிய-அல்லாத அமைப்பின் ஆட்சியை அகற்றி அதன் இடத்தில் இஸ்லாமிய அரசு ஆட்சி முறையை நிலைநிறுத்துவதாகும்.” (ஜிஹாத் ஃபில் இஸ்லாம்).
ஹைதராபாத்தைச் சேர்ந்த அறிஞர் மௌலானா அப்துல் அலீம் இஸ்லாஹிஇஸ்லாத்தில் அதிகாரத்தின் கருத்தாக்கத்தைக் குறித்து அவரது ஃபத்வாவில் கண்மூடித்தனமான வன்முறையை நியாயப்படுத்துகிறார். ஹைதராபாத்தில் ஒரு பெண்கள் மதரஸாவை நடத்தி வருவது மட்டுமின்றி இந்திய முஜாஹிதினுக்கு பின்னால் ஒரு உத்வேகம் அளித்ததாகவும் அறியப்படுகிற இந்த மௌலானாவின் எழுத்துக்களில் இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டுகிறேன்:
"இஸ்லாமிய சட்டவியலின்படி, தங்கள் நாடுகளில் சமயநம்பிக்கையற்றவர்களை (குஃபர்) எதிர்த்துப் போராடுவது கடமை என்பது உலெமாவின் ஒருமித்த கருத்து(ஃபார்ஸ்-இ-கிஃபாயா) என்பது அறியப்படட்டும்…
“…கலிமாவை (விசுவாசத்தை அறிவிப்பது) நிலைநிறுத்துவதற்கான கிடால் (கொலை, வன்முறை, ஆயுதப் போராட்டம்) அட்டூழியம் என்றோ, மீறல் என்றோ அழைக்கப்படவுமில்லை தடைசெய்யப்படவும் இல்லை என்று நான் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். மாறாக, கலிமாவை நிலை நிறுத்தும் நோக்கத்திற்காக கிடால் உத்தரவிடப்படுவது மட்டுமல்லாமல் புத்தகத்தில் (குர்ஆன்) மற்றும் சுன்னா (ஹதீஸ்) ஆகியவற்றில் வலியுறுத்தப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் உண்மையிலேயே ஊக்கமளிக்கப்பட்டு, குவாலில் ஈடுபட உந்துதல் பெற்றிருக்கிறார்கள், மற்றும் இதற்காக அவர்களுக்கு நல்ல விவரங்களுடனான வெகுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.”
"தவறான மதங்கள் மீது இஸ்லாத்தின் ஆதிக்கத்திற்காகப் போராடுவது (முஸ்லிம்களின்) கடமையாகும், மேலும் அஹ்ல்-இ-குஃப்ர்-ஓ-ஷிர்க்கை (காஃபிர்கள் மற்றும் பல்லிறைவாதிகள்) அடிபணியச் செய்து அடிபணியச் செய்வது முஸ்லிம்களின் கடமையாகும். அதே வழியில் மதமாற்றம் செய்து இஸ்லாத்திற்கு மக்களை அழைப்பதும் முஸ்லிம்களின் கடமையாகும். சத்தியத்திற்கு சாட்சியமளிக்கும் மற்றும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தீன் கடவுள் கொள்கைகளை உச்சரிக்கும் பொறுப்பை வெறுமனே பிரசங்கிப்பதன் மூலமும், மதமாற்றம் செய்வதன் மூலமும் நிறைவேற்ற முடியாது. அவ்வாறு இருந்திருந்தால் சண்டையிட்ட போர்கள் தேவையில்லாமல் இருந்திருக்கும்.
"தீன் (மதம்) ஆதிக்கம் செலுத்துவதற்கும் தீய மையங்களை நிறுத்துவதற்கும் ஜிஹாத் கடமையாக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கடவுளின் பெயரில் ஜிஹாத்தின் முக்கியத்துவம் குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் அனைத்து குஃபர்களையும் (காஃபிர்கள்) எதிர்த்துப் போராடுவது பற்றி முஸ்லிம்களுக்குத் தெளிவான கட்டளைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன: “அவர்கள் உங்களுக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை நிறுத்துவதைப் போலவேஒன்றுபட்டு பல்லிறைவாதிகளுடன் (முஷ்ரிக்) போராடுங்கள்” (சூரா தௌபா: 9:36) ”.
[மௌலானா அப்துல் அலீம் இஸ்லாஹியின் உருது கையேடான "தகாத் கா இஸ்டெமல் குர்ஆன் கி ராவ்ஷ்னி மெயின்," "த யூஸ் ஆஃப் வயலென்ஸ், இன் த லைட் ஆஃப் த குர்’ஆன்’] லிருந்து எடுக்கப்பட்ட மற்றும் மொழிபெயர்க்கப்பட்டது
மௌலானா வாஹுதுதீன் கான் (பிறப்பு 1925), அமைதி மற்றும் பன்மைத்துவத்தை ஊக்குவிப்பவர் பின்வருமாறு கூறுகிறார்:
"ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தீர்க்கதரிசிகளின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், அறிவுபூர்வமான அல்லது சமயம் பரப்புத் துறைக்குள்வரையறுக்கப்பட்ட எந்தவொரு போராட்டமும் இந்த மூடநம்பிக்கையின் (ஷிர்க், குஃப்ர்) பிடியில் இருந்து மனிதனை வெளியேற்றுவதற்கு போதுமானதாக இல்லை என்பதை நிரூபித்துள்ளது. (எனவே) இது கடவுளின் ஆணை அதாவது அவர் (நபிகள் நாயகம்) ஒரு டா’ய் (மதப்பரப்பாளர்) மற்றும் ம’ஹி (ஒழிப்பவர்). மூடநம்பிக்கை (ஷிர்க், குஃப்ர்) பொய்யை அடிப்படையாகக் கொண்டவை என்பதை உலகுக்கு அறிவிப்பது மட்டுமல்லாமல், தேவை ஏற்பட்டால், அதை முழுவதுமாக அகற்றுவதற்கான இராணுவ நடவடிக்கையையும் நாட வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு கடவுளால் ஒப்படைக்கப்பட்டது.”
[மௌலானா வாஹிதுதீன் கானின் “இஸ்லாம் – க்ரியேட்டர் ஆஃப் த மாடர்ன் வேர்ல்ட்,” புத்தகம் 2003 இல் மீண்டும் அச்சிடப்பட்டது].
முஸ்லிம்களிடையே சமாதானத்தையும் பன்மைத்துவத்தையும் இடையறாது ஊக்குவிப்பவர் கூட பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய நீதித்துறையின் அடிப்படையில் ஒப்புக் கொள்ள வேண்டியது அதாவது இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்திக் கூட உலகில் இருந்து நம்பிக்கையின்மையை ஒழிப்பதே நபிகளின் வேலை என்பது முரண்பாடாக இருக்கிறது,. இது அப்படியானால், நபி அவர்களின் முடிக்கப்படாத பணியைத்தான் முன்னெடுத்துச் செல்வதாக இந்த உலகின் பின்லேடன்ஸ் மற்றும் பாக்தாதிகள் உரிமை கொண்டாடுவதை எப்படித் தடுப்பது?
இந்த எல்லா பிரசங்கங்களிலிருந்தும் செய்தி தெளிவாக உள்ளது. இஸ்லாம் உலகில் ஆதிக்கம் செலுத்த வேண்டும், மேலும் இந்த செயல்முறைக்கு உதவுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். ஒரு முஸ்லீம் எங்கு திரும்பினாலும் அவருக்கு அதே இஸ்லாம்-மேலாண்மைவாதி செய்தி கிடைக்கிறது. இஸ்லாமிய இறையியல் பற்றிய மிகவும் அதிகாரப்பூர்வ புத்தகங்களில் சமீபத்தியது 45 தொகுதி விரிவான என்சைக்ளோபீடியா ஆஃப் ஃபிக் (இஸ்லாமிய நீதித்துறை) ஆகும். இது அரை நூற்றாண்டு காலகட்டத்தில் குவைத்தின் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சினால் ஈடுபடுத்தப்பட்ட அனைத்து சிந்தனைப் பள்ளிகளிலிருந்தும் அறிஞர்களால் தயாரிக்கப்பட்டது. அதன் உருது மொழிபெயர்ப்பு டெல்லியில் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியால் 23 அக்டோபர் 2009 அன்று வெளியிடப்பட்டது.
இஸ்லாமிய சட்டவியல் பற்றிய மிகவும் செல்வாக்குமிக்க இப் புத்தகம் ஜிஹாத் பற்றி 23,000 வார்த்தைகள் அடங்கிய அத்தியாயத்தைக் கொண்டுள்ளது. நாங்கள் மிதவாத முஸ்லிம்கள் மற்றும் சூஃபிகள் ஒருவரின் சொந்த நாஃப்களுக்கு எதிரான போராட்டம் (சுயத்தைக் குறைக்கும், எதிர்மறை ஆணவம்) உண்மையான மற்றும் உயர்வான ஜிகாத் என்றும் கிதால் (போர்) என்பது முக்கியமல்லாத, தாழ்வான ஜிஹாத் என்றும் பேசுவதைப் பற்றி அயற்சி ஏற்படும் அளவு தொடர்ந்து பேசுகிறோம். ஆனால் ஆரம்பத்தில் ஒரு வாக்கியத்தைத் தவிர, முழு அத்தியாயமும் எதிரிகளை எதிர்த்துப் போராடுவது மற்றும் எதிரிகளைக் கொல்வது தொடர்பான விவகாரங்கள் அதாவது காஃபிர்கள், பல்லிறைவாதிகள் அல்லது விசுவாசதுரோகிகள் பற்றி அப்பட்டமான அறிவிப்புடன் தொடங்கிமுழுமையாகப் பேசுகிறது: “ஜிகாத் என்றால் எதிரிக்கு எதிராகப் போராடுவது.” உண்மையான அல்லது பெரிய ஜிஹாத் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பின்னர்இப்னு-இ-தைமியா இவ்வாறு மேற்கோள் காட்டப்படுகிறது:
“…எனவே ஜிஹாத் என்பது ஒருவரின் திறனைப் போலவே வாஜிப் (பொறுப்பில் இருப்பவர்)”.பின்னர் இறுதியான, உறுதியான வரையறை வருகிறது: “சொற்களஞ்சியமாக, ஜிஹாத் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகளை நிலைநிறுத்துவதற்கோ அல்லது உயர்த்துவதற்கோ இஸ்லாத்தை நோக்கிய அழைப்பை நிராகரித்தஜிம்மி அல்லாத அவிசுவாருக்கு எதிராக (காஃபிர்) போராடுவதாகும்.” (அசல் அரபியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. )
ஓர் அறிவார்ந்த, கல்வியறிவு பெற்ற முஸ்லீமுக்கு நமது பாசாங்குத்தனத்தைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. தீவிரவாத இஸ்லாமிய இறையியல் என மிதவாதிகள் எங்களால் தெளிவாகக் கண்டனம் செய்யப்படுவது அனைத்து சிந்தனைப் பள்ளிகளின் உலேமாவால் ஒருமித்த கருத்து மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போதைய இஸ்லாமிய இறையியலில் இருந்து கணிசமாக வேறுபட்டதல்ல.
மறைந்த ஒசாமா பின்லேடன் அல்லது அவரது கருத்தியல் வழிகாட்டியான இப்போது உலகளாவிய ஜிஹாத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அப்துல்லாஹ் யூசுப் ‘அஸ்ஸாம், மற்றும் அவருடைய இன்றைய வாரிசான அபுபக்கர் அல்-பாக்தாதி ஒரு புதிய இறையியலைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பயன்படுத்தும் ஒருமித்த இறையியல்தான் இவ்வளவு குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் இளைஞர்களை ஈர்ப்பதில் அவர்கள் பெற்ற வெற்றியின் பின்னணியில் உள்ளது. நாங்கள் பிரதான முஸ்லிம்கள் எங்கள் பாசாங்குத்தனத்தை உணர்ந்து, போக்கை மாற்றும் வரை அவர்கள் அதிகமான இளைஞர்களைத் தொடர்ந்துஈர்த்துக் கொண்டிருப்பார்கள்
நமது படித்த இளைஞர்களை தீவிரவாதத்திற்கு வழிவகுக்கும் இந்த ஒருமித்த இறையியலின் கூறுகள் யாவை? ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
1. குர்ஆனில் உள்ள சில உருவக வசனங்களை அப்படியே அர்த்தங்கொண்டு படித்ததைத் தொடர்ந்து, பல முஸ்லிம்கள் தற்போது கடவுளை சாந்தப்படுத்த முடியாத, மாந்தவுருவக விலங்காக எண்ணிக் கொண்டு அவரது தனித்துவத்தை நம்பாதவர்களுடன் நிரந்தரமாகப் போரில் ஈடுபடுகின்றனர்.
இது பிரபஞ்சம் முழுவதுமான விழிப்புணர்வு அல்லது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் அவருடைய இறையருளை வெளிப்படுத்தும் பிரபஞ்ச நுண்ணறிவு என கடவுளின் சூஃபி அல்லது வேதாந்தக் கருத்தை மறுப்பதாகும். துரதிர்ஷ்டவசமாக, சூஃபி இஸ்லாமியக் கல்லூரிகள் அவர்களே கூட, குறைந்த பட்சம் இந்திய துணைக் கண்டத்திலாவது, வஹததுல் வஜுத் (ஒற்றுமையுடன் இருப்பது) என்ற கருத்தை, இது வேதாந்த கருத்திற்கு நெருக்கமாகி அதனால் இந்துகருத்தின்படியான கடவுளுக்கு மிக நெருக்கமாகிவிடும், என்ற அச்சத்தில் கைவிட்டுவிட்டது.
அதற்கு பதிலாக அவர்கள் ஷேக் சிர்ஹிந்தியின் வாக்ததுல் ஷுஹுத் (வெளிப்படையான தன்மை, தோற்றங்களின் ஒற்றுமை) வஹததுல் வஜுத் என்ற பெயரில் கற்பிக்கிறார்கள். அக்பர் பேரரசரின் ஆட்சிக் காலத்தில் சூஃபி எஜமானர்களான மொஹியிதீன் இப்னு-அரபி மற்றும் மன்சூர் அல்-ஹலாஜ் ஆகியோரின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள ஷேக் சிர்ஹிந்தி இந்த கருத்தைக் கண்டுபிடித்தார்.
பெரும்பாலான சூஃபி கல்லூரிகள், ஹஸ்ரத் டேட்டா கஞ்ச் பக்ஷ் ஹிஜ்வேரி எழுதிய கஷ்ஃபுல் மஹ்ஜூப், ஷேக் உமர் ஷாஹாபுதீன் சுஹ்ரவர்தி எழுதிய அவரிஃப்-உல்-மரிஃப், ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா, மஸ்னாவ் ஜுலாவின் ஜஸ் மற்றும் போஸ்டன் ஷேக் சாதி ஷிராஜி, முல்லா சத்ரா ஷிராசியின் எஸ்ஐ அஸ்ல், ஷேக் இப்னுல் அரபியின் புசுசுல் ஹிகாம், பெரிய சூஃபிகளின் வாழ்க்கை மற்றும் போதனைகள் புத்தகங்கள் கரீப் நவாஸ் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அஜ்மேரி, பாபா ஃபரீத், அமீர் குஸ்ரோ போன்ற மருளியல் புத்தகங்களைத் தங்கள் கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டன.
2. தீவிர சித்தாந்தவாதிகள், தாக்குதல் ஜிஹாத்தை ஆதரிப்பதற்காக குர்ஆனின் போர்க்குணமிக்க, இனவெறி வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். சுஃபி வழியான கருத்துகள் கொண்ட மிதவாதிகள் நாங்கள் அதனை எதிர்த்து இப்படிச் சொல்கிறோம்: சூழலைப் பாருங்கள். இந்த வசனங்கள் போரின்போது வந்தன மற்றும் தவிர்க்க முடியாமல் சண்டை, கொலைகள், தியாகிகளுக்கு வெகுமதிகளை வழங்குவது மற்றும் பகிரங்கமாக எதிரி மீது வெறுப்பைக் காட்ட வேண்டும் போன்ற ஆணைகள். போர்களில் இருவகை வாதங்களை முன்வைப்பது அசாதாரணமானது அல்ல.
இவ்வாறு முஸ்லீம்-காஃபிர் இருவகை தவிர்க்க முடியாமல் போர்களின் போது வெளிப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, குர்ஆனின் பெரும்பாலான போர்க்கால வசனங்கள் மதீனாவில் வெளிப்படுத்தப்பட்டு, முதலில் அனுமதித்து பின் பல்வேறு போர்களின் போக்கில் முஸ்லிம்களை வழிநடத்தியது வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஒரு பிரதிபலிப்பாகும்.
ஆனால் நாங்கள் இந்த போர்க்கால வசனங்கள் இயல்பாகவே சூழல் சார்ந்தவை என்ற தர்க்கரீதியாக முடிக்கும் வாதங்களை எடுத்துக் கொள்வதில்லை, அதாவது, இந்த வசனங்கள் இப்போது வழக்கற்றுப் போய்விட்டன; அந்தச் சூழல் இல்லாதபோது அவை இன்று நமக்குப் பொருந்தாது.
3. குர்ஆனின் சூழலியல் வசனங்கள் வழக்கற்றுப் போனவை என்று நாங்கள் சொல்லவில்லை என்பதோடு, குர்ஆன் உருவாக்கப்படவில்லை கடவுளின் அம்சம் என்பதையும், அதன் அனைத்து வசனங்களும், சூழலுக்கு அப்பாற்பட்டு உலகளவில் மற்றும் எப்போதுமே முஸ்லிம்களுக்குப் பொருந்தும் என்பதையும் தீவிரவாதிகளுடன் ஒப்புக்கொள்கிறோம். குர்ஆன் உருவாக்கப்படாத, தெய்வீக, கடவுளின் நேரடி பிரசங்கம், கடவுள் ஒரு மானுடவியல் உயிரினம் போன்றவர் என்று ஒவ்வொரு இஸ்லாமியக் கல்லூரியும் கற்பிக்கிறது. குர்ஆனிய அறிவுரைகளை கையாளும் போது, நாம் சூழலைப் பார்க்க வேண்டும் என்ற எங்கள் முந்தைய வாதத்தை இது முற்றிலும் தோற்கடிக்கிறது. என்ன சூழல்?
குர்ஆன் உருவாக்கப்படவில்லை கடவுளின் அம்சம், மாறா தன்மையானது, நித்தியமானது, ‘சொர்கத்தின் பெட்டகத்தில்’ (லாஹ்-இ-மஹபூஸ்) கிடந்த அசல் குர்ஆனின் நகல் என்றால், சூழல் பற்றிய கேள்வி எங்கே? போரின் சூழலில் வெளிப்படுத்தப்பட்ட குர்ஆனின் போர்க்குணமிக்க, இனவெறி, சகிப்புத்தன்மையற்ற அறிவுரைகள் கூட பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று போர்க்குணமிக்க கருத்தியலாளர்கள் நம் இளைஞர்களிடம் போதிப்பது சாத்தியமாக்குகிறது, ஏனெனில் இன்று எந்தவொரு பள்ளியிலும் தற்போது அவற்றின் பொருந்தக்கூடிய தன்மை குறித்து எந்த சர்ச்சையும் இல்லை.
4. இஸ்லாமிய இறையியலில் ஒருமித்த கருத்து உள்ளது, அதாவது நபிகள் நாயகத்தின் சொற்கள் என்று அழைக்கப்படும் ஹதீஸ், வெளிப்பாட்டுக்கு ஒத்ததாகும். நபி மறைந்த பிறகு 300 ஆண்டுகள் வரை இவை சேகரிக்கப்பட்டன. பகுத்தறிவு முஸ்லிம்கள் அவற்றின் நம்பகத்தன்மையையும், ஆதாரங்களையும் சந்தேகிக்கிறார்கள், ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை எதிர்க்கும் உலமாக்கள் கூட, மில்லினேரியசத்தை வலியுறுத்தாத அல்-கொய்தாவுடன் ஒப்பிடும்போது ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் பெரும் வெற்றிக்கு முதன்மைக் காரணம் ஹதீஸ் அடிப்படையிலான மில்லினேரியன் ஆய்வறிக்கை என்பதை கேள்விக்குள்ளாக்க முடியாது.
குர்ஆனின் ஓரிரு உருவ வசனங்களும், நபிகளால் கூறப்பட்ட கணிப்புகளும் உலகம் முடிவுக்கு வரப்போகிறது என்றும், ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய இறுதி நேர யுத்தத்தைத் தொடர்ந்து இஸ்லாம் வெற்றிபெறப் போகிறது என்றும் விளக்கி அர்த்தம் கொள்ளப்பட்டப்பிறகு, காஃபிர்களால் நடத்தப்படும் கார்ப்பரேட்டுகளுக்கு வேலை செய்வதில் என்ன பயன்? உலகம் முடிவதற்கு முன்பு ஏன் போரில் சேர்ந்து தியாகியாகவோ அல்லது இஸ்லாமிய புனித போர் வீரராகவோ மாறக்கூடாது? அப்படியாக வாதம் செல்கிறது.
டெல்லியின் உருது பஜாரில் நிரந்தரமாக நன்றாக விற்பனையாகும் ஒன்று “கியாமத் கி பெஷிங்கோயன்” (இறுதி நேர கணிப்புகள்) என்றழைக்கப்படும் சிறு புத்தகம். கெய்ரோ, பாக்தாத், டமாஸ்கஸ், இஸ்தான்புல், தெருக்களில் எங்கிருந்தாலும் இதேபோன்ற கையேடு விற்பனை செய்யப்படுவதை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஹதீஸை தோற்றத்திற்கு ஒத்ததாகச் சொல்லும் சுயமாக அறிவித்துக் கொண்ட மிதவாதிகள் உட்பட அனைத்து சிந்தனைப் பள்ளிகளின் இறையியலாளர்களின் கேள்விகளுக்குள்ளாக்க முடியாத ஆதரவைக் கொண்டிருக்கும்போது, இந்த நம்பிக்கையை ஐ.எஸ்.ஐ.எஸ் ஏன் நன்கு பயன்படுத்தக்கூடாது?
ஒரு போரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக குர்ஆனில் மீண்டும் மீண்டும் தெளிவான அறிவுறுத்தல்கள் உள்ளன என்றாலும் கொல்லப்படுவதை நியாயப்படுத்த அஹதீத் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஹதீஸ், தோற்றத்தை ஒத்தது என்று நீங்கள் கூறும் தருணம், இஸ்லாத்தில் ஒரு அப்பாவி நபரைக் கொல்வது மனிதகுலத்தைக் கொல்வதாகும் என்ற உங்கள் குர்ஆனிய நியாயப்படுத்தப்பட்ட கூற்றின் தாக்கத்தை நீங்கள் பயனற்றதாக்குகிறீர்கள்.
5. நபிகள் இறந்து 120 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றும் இஸ்லாம் மதத்தை முழுமை செய்வித்ததாக குர்ஆனில் கடவுள் அறிவித்தபடியும் (5: 3) இது சில குர்ஆனிய வசனங்கள் மற்றும் இஸ்லாமியத்திற்கு முந்தைய அரபு பெடோயின் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் முதன்முதலில் குறியிடப்பட்டிருந்தாலும், கிட்டத்தட்ட அனைத்து முஸ்லிம்களும் ஷரியாவை தெய்வீகமானது என்றும், மாறாதது என்றும் கருதுகின்றனர்,
இதன் விளைவாக, முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை பன்முக கலாச்சார ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்கள் கூட ஷரியா-இணக்க சட்டங்களைக் கோருகின்றனர். தாங்கள் நம்புவதை நடைமுறைப்படுத்த விரும்புவோர், சில சமயங்களில் அவர்களது குடும்பத்தினருடனும், இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படுபவற்றில் குடியேற விரும்புவதில் ஆச்சரியமில்லை. உதாரணமாக, இந்தியாவில் மிதமான முஸ்லிம்கள் கபடதாரிகள் என்று தீவிரமாக்கப்பட்ட இளைஞர்கள் எண்ணுவதைக் குற்றப்படுத்த முடியாது. ஷரியாவின் தெய்வீகத்தன்மை குறித்த தங்கள் நம்பிக்கையை உடனடி விவாகரத்து மற்றும் பலதிருமணங்கள் போன்ற ஆணாதிகச் சலுகைகளுக்கு மட்டுமே பயன்படுத்த விரும்பும்அதேசமயம் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் நாடுகளுக்குப் புலம்பெயர விரும்பும் தீவிரவாதிகள் திருட்டுக்காகக் கைகளை வெட்டுதல், விபச்சாரம் மற்றும் கொலைக்கு வசைபாடுதல் மற்றும் கல்லெறிதல் போன்ற ஷரியாவின் குற்றவியல் நீதி அமைப்பின் அனைத்துக் கடுமையையும் ஏற்கத் தயாராக உள்ளனர்.
6. ஒரு கலிபாவை நிறுவ உதவுவதும் ஆதரிப்பதும் முஸ்லிம்களின் மதக் கடமையாகும் என்பது போன்ற வழிகாட்டல்கள் குர்ஆனில் முற்றிலும் இல்லை என்றாலும் இஸ்லாமிய இறையியலில் இப்படியான ஒருமித்த கருத்து உள்ளது. ஆனால், ஹதீஸை தோற்றத்திற்கு ஒத்ததாக நம்புபவர்களால், இந்த ஹதீஸின் அடிப்படையில் சட்ட உரிமை கொண்டாடும் ஐ.எஸ்.ஐ.எஸ்’ ஐ எதிர்க்க முடியவில்லை:
“அல்லாஹின் தூதர் கூறியதாக ஹஸ்ரத் ஹுசைஃபா விவரித்தார்:“ அல்லாஹ் விரும்பும் வரை நபித்துவம் உங்கள் மத்தியில் நிலைத்திருக்கும். பின்னர் நபித்துவத்தின் அடிப்படையில் கலிபா (கிலாஃபா) தொடங்கி, அல்லாஹ் விரும்பும் வரை நிலைத்திருக்கும். அதன்பிறகு, சர்வாதிகார ராஜ்யம் வெளிப்படும், மேலும் அது அல்லாஹ் விரும்பும் வரை இருக்கும். பின்னர், கலீபேட் (கிலாஃபா) மீண்டும் நபித்துவத்தின் கட்டளையின் அடிப்படையில் வரும். "(முஸ்நாத் அகமது இன்ப் ஹன்பாலி).
7. ஷரியா அமல்படுத்தப்படாத தாருல் ஹர்பிலிருந்து இஸ்லாமிய ஷரியாவின் நிலத்திற்கு ஹிஜ்ரத் (புலம்பெயர்தல்) முஸ்லிம்களுக்கு ஒரு மதக் கடமையாகும்.கலீஃபா அல்-பாக்தாடியின் தாருல் இஸ்லாம் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து தப்பிப்பதற்கான ஆற்றொணா முயற்சியில் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ஐரோப்பிய ‘தாருல் ஹர்ப்’ என்றழைக்கப்படும் இடத்திற்குக் கிட்டத்தட்ட வெறுங்காலுடன் அணிவகுத்துச் செல்லும் நேரத்தில் இது விசித்திரமாகத் தோன்றலாம். சவூதி அரேபியாவின் ‘தாருல் இஸ்லாம்’ ஒரு ஆத்மாவுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துவிட்டஅதே நேரத்தில் ஐரோப்பிய ‘தாருல் ஹர்ப்’ மில்லியன் கணக்கான முஸ்லிம்களுக்கு இடமளிக்கிறது. ஆனால் உலேமாக்கள் தங்கள் இறையியலின் எந்தப் பகுதியையும் கேள்வி கேட்க அனுமதிக்க மாட்டார்கள்.
8. குர்ஆனின் சில ஆரம்ப வசனங்கள் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக சிறந்த மற்றும் பொருத்தமான பிற்கால வசனங்களால் மாற்றப்பட்டுள்ளன என்று அனைத்து பள்ளியின் இறையியலாளர்களும் நம்புகிறார்கள். இந்த ரத்துசெய்யும் ஒருமித்த கோட்பாடு, தீவிரவாத சிந்தனையாளர்களால் எல்லா 124 அடித்தள, கட்டமைப்பு, மெக்கன் வசனங்கள், பன்மைத்துவம், பிற மத சமூகங்களுடன் ஒருமித்த வாழ்வு, கருணை, அண்டை அயலாரின் மீது அன்பு போன்றவற்றை ரத்து செய்து, மெதீனா வசனங்களான போர், இனவெறி மற்றும் வெறுப்பு இவற்றை மாற்றியமைத்திடக் கோருவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரத்து கோட்பாட்டை சூஃபி இறையியலாளர்கள் எதிர்க்காத வரை, மெக்கான் குர்ஆனிலிருந்து அவர்கள் மேற்கோள் காட்டிய வசனங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை.
9. இஸ்லாத்தில் முஸ்லிம்களுக்கு மத சுதந்திரம் இல்லை என்று அனைத்து சிந்தனைப் பள்ளிகளின் இறையியலாளர்களிடையே ஒருமித்த கருத்து உள்ளது. மதநம்பிக்கைதுரோகம் (இர்டிடாட் அல்லது ரித்தா) மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மதநம்பிக்கைதுரோகிக்கு மன்னிப்பு கோருவதற்கும் அவரது முந்தைய நிலைக்குத் திரும்புவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா என்பதுதான் ஒரே சர்ச்சை. இறையியலின் இந்த முக்கிய அம்சத்துடன், மதநம்பிக்கைதுரோகிகளாக மாறியதன் அடிப்படையில் ஏராளமான முஸ்லிம்களுக்கு மரணத்தைக் கட்டளையிடும் பயங்கரவாத சித்தாந்தவாதிகளை, முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்க்க முடியும்?அவர்களின் பார்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பிற குழுக்களுடன் சேராத முஸ்லிம்கள் அனைவரும் மதநம்பிக்கைதுரோகிகள், குறிப்பாக ஷியா, அஹ்மதிஸ், யெஜிடிஸ் போன்றவர்கள். இந்த இறையியலை நாம் எதிர்க்கவில்லை என்றால் நம் இளைஞர்கள் தீவிரவாதிகளாவதை எவ்வாறு தடுப்பது?
10. பிரச்சினை என்னவென்றால் ஒரு முஸ்லீம் யார்? என்பதில் முஸ்லிம்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. 1954 ல் அஹ்மதியா எதிர்ப்பு கலவரத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நீதிபதி முனீர், முஸ்லீம் என்பதற்கான வரையறைக்கு இரண்டு உலமாக்களும் உடன்படவில்லை என்று தெரிவித்தார். உயர்ந்த சிந்தனையாக,குர்ஆன் எங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும், அதன்படி நபிகள் நாயகத்தின் வருகைக்கு முன்பே கூட கடவுளிடம் சரணடைந்த ஹஸ்ரத் மூசா அல்லது மோசே கூட ஒரு முஸ்லீம் (குர்ஆன் 10.90).
மதம் மாறிய முஸ்லிம்களைப் பற்றி அல்லாஹ் நமக்குத் தெரிவிக்கிறார், ஆனால் ‘நம்பிக்கை இன்னும் அவர்களின் இதயத்தில் நுழையவில்லை’ (அல்குர்ஆன் 49:14). என்றாலும், அல்லாஹ் அவர்களுக்கு எந்த தண்டனையும் பரிந்துரைக்கவில்லை, அவர்கள் இஸ்லாத்தின் மடிப்பிலிருந்தும் வெளியேறவில்லை. கடவுளை நம்புவதாக அல்லது சரணடைவதாகக் கூறும் எவரும் ஒரு முஸ்லீம் என்பதே இதன் பொருள். முஸ்லிம்களால் குறைந்தபட்சம் செய்யக்கூடியது, இர்ஜாவை ஏற்றுக்கொள்வதேயாகும், மத நம்பிக்கை விஷயங்களில் தீர்ப்பை தீர்ப்பு நாளுக்கு ஒத்தி வைப்போம் எனும் முர்ஜியாக்களின் (ஒத்திவைப்பவர்களின்) நிலைப்பாட்டை. மத நம்பிக்கை விஷயங்களில் மக்களுக்கு நியாயம் வழங்க கடவுளை அனுமதிப்போம். ஒருவரின் இதயத்தில் என்ன இருக்கிறது என்று மனிதர்களாகிய நமக்குத் தெரியாதபோது, ஒருவரை அவர் நம்புகிறாரா இல்லையா என்பதற்காக அவரைத் தண்டிக்க நாம் யார்?மிகவும் பகுத்தறிவு நிலைப்பாடு, ஆனால் முஸ்லிம்கள் முதலில் பகுத்தறிவை அல்லது குர்ஆனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
11. தெய்வ நிந்தனையிலும் இதே நிலைதான். அவதூறு மிகச்சிறிய அளவிலானாலும் கூட, அவதூறு செய்பவருக்கு, ஒருமித்த இஸ்லாமிய இறையியல் மரணத்தைப் பரிந்துரைக்கிறது.பல முஸ்லீம் நாடுகளில் அவதூறு எதிர்ப்பு சட்டங்கள் உள்ளன, என்றாலும் அவற்றை மிகவும் தவறாகப் பயன்படுத்துவது பாகிஸ்தான் தான். துரதிர்ஷ்டவசமாக, தூற்றுபவர்களைக் கொலை செய்வதை ஆதரிப்பவர்களில் சூஃபி எண்ணம் கொண்ட முஸ்லிம்கள் முன்னணியில் உள்ளனர், மற்றும் சிலர் அவதூற்றிற்கானக் கொலையாளிகளில் கூட உள்ளனர். நம்முடைய சொந்த சித்தாந்தமும் ஐ.எஸ்.ஐ.எஸ். சித்தந்தமும் ஒரே போன்று இருந்தால் நாம் எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும்?
இஸ்லாமிய இறையியல் தெளிவாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும், ஜிஹாதிஸத்தை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், பெண்கள், குழந்தைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், மத சிறுபான்மையினர், நாத்திகர்கள் போன்ற மனித உரிமைகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளையும் கையாள வேண்டும்.
(சுல்தான் ஷாஹின் ஒரு முற்போக்கான இஸ்லாமிய வலைத்தளமான NewAgeIslam.com இன் நிறுவன ஆசிரியராக உள்ளார். இந்த கட்டுரை செப்டம்பர் 26, 2016 அன்று UNHRC க்கு அவர் அளித்த உரையின் அடிப்படையில் அமைந்துள்ளது)
இந்த கட்டுரை முதன்முதலில் Sabrangindia.in இல் வெளியிடப்பட்டது
English Article: If Islam Means Peace, Why Is Much Of Its Theology Soaked In Hatred, Humiliation, Offensive War?
New Age Islam, Islam Online, Islamic Website, African Muslim News, Arab World News, South Asia News, Indian Muslim News, World Muslim News, Women in Islam, Islamic Feminism, Arab Women, Women In Arab, Islamophobia in America, Muslim Women in West, Islam Women and Feminism
No comments:
Post a Comment